யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்

0
901 views

யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே..

Meaning:

I did not intend to hold him in my heart, He came of his own and occupied me fully. He has blended himself into my very flesh and breath, Will he decide to forsake me now?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

எம்பெருமான் தம்மை ஒருநாளும் விடமாட்டானென்பதை வற்புறுத்தியருளிச் செய்கிறாரிதில். அவன் தானாகவே வந்து கைக்கொண்டவனாயிருந்து வைத்து எங்ஙனே விட்டு நீங்கவல்லானென்கிறார் (யானொட்டியென்னுள் இருதபுதுவமென்றிலன்) எம்பெருமானை என்னெஞ்சினுள்ளே யிருத்திக்கொண்டது நானாகவோ? அவன்தானே வந்து ‘ஆழ்வீர்! உம்முடைய நெஞ்சிலே உறையக்கடவேன்’ என்றாலும் வேண்டா வேண்டாவென்று விலக்குவதன்றோ என் பணியாயிருநத்து; ‘இப்படி நீர் விலக்குவதனால் நான் இங்கு இருந்தே தீரக்கடவேன்’ என்று சபதம் பண்ணிக்கொண்டு அவனாகவே வந்து இருக்கின்ற இருப்பன்றோவிது.

யானொட்டி யென்னுள என்கிற இந்தப் பாசுரத்தின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானத்தில் *அத்யமே மரணம் வா* என்கிற ஸ்ரீராமாயண ச்லோகம் உதாஹரிக்கப்பட்டு ஸங்க்ரஹமாக விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ்லிபியிலும தெலுங்கு லிபியிலும் பதிப்பிக்கப்பட்டுள்ள பகவத்விஷய ஸ்ரீகோசங்களில் அவ்விடத்துள்ள பங்க்தி-

“(தான் ஒட்டிவந்து) ‘அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்ய வா’ என்று இத்தை முடித்தல் கடத்தல் செய்யுமதுக்கு மேற்படவில்லை என்றாற்போலே பிரதிக்ஞை பண்ணியாயிற்றுப்புகுந்தது” என்றாம்.

இங்க “இத்தை முடித்தல் கடத்தல்” என்றிருக்கிறது. (இந்த வாக்கியத்தின் நிஜஸ்வரூபமென்னவென்பதை மேலே விளக்குவேன்.) இவ்விடத்திற்கு அரும் பதவுரை யெழுதியவர்கள்-

“அத்யமே தரணம் வா ஸாகரஸ்ய மரணம் வா” என்று அந்வயம் திருவுள்ளம்பற்றி அர்த்தமருளிச் செய்கிறார் இத்தை முடித்தல் இத்யாதி. *சாபமாநய* இத்யாதியைக் கடாக்ஷித்து இப்படி யோஜித்தது. என்றெழுதி வைத்திருக்கிறார்கள். இது ஸங்கதமன்று.

முற்காலத்தில் ஓலை ஸ்ரீகோசங்கள் எழுதிவந்தவர்கள், ஒருவர் ஏடுபார்த்துச் சொல்லவும் மற்றொருவர் எழுதவும் ஆக இப்படியே பெரும்பாலும் எழுதிவந்தவர்கள். முன் உதாஹரித்த ஈட்டுப்பங்க்தி “இற்றை முடிதல் கடத்தல்” என்றிருந்தது எழுதுமவர்க்கு ஏடுபார்த்துச் சொல்லிவந்தவர் இற்றை என்பதைத்தற்கால உச்சாரணமுறைப்படி இத்தை என்று சொன்னார். எழுதுகிறவரும் “இத்தை முடிதல் கடத்தல்” என்றெழுதிவைத்தார். அதைப்பார்த்து மற்றொருவர் எழுதிக்கொள்ளும்போது ‘இத்தை முடிதல்’ என்றால் அந்வயிக்க வில்லையேயென்று “இத்தை முடித்தல்” என்று எழுதிவிட்டார். இங்ஙனம் பல ஸ்ரீகோசங்கள் பரவிவிட்டன. அரும்பதவுரைகாரர்க்கு இத்தகையபாடங்கொண்ட ஸ்ரீகோசம் கிடைத்தமையால் அதற்குத்தக்கபடி அவர் விவரணஞ் செய்துவிட்டார். வெகுநாளைக்கு முற்பட்ட ஓலை ஸ்ரீகோசங்களை ஸம்பாதித்துப் பார்த்ததில் இந்த நுட்பம் புலனாயிற்று.

இப்போது யாம் எடுத்தெழுதிய பாடத்தில் அர்த்தம் நன்கு பொருத்துவதுந் தவிர, ஈடு முப்பத்தாறாயிரப்படியில் இந்த ச்லோகம் எந்த அம்சத்திற்கு உதாஹரணமாக எடுத்தாளப்பட்டதோ அதற்கும் மிக்க பொருத்தமாக அமைகின்றது. ‘அத்யயே மரணம் வா” என்ற மூலத்திற்குத் தகுதியான அர்த்தம் ‘இற்றை முடிதல் என்பது இற்றை = இன்றைத்தினம் என்றபடி, இது அத்ய என்பதன் பொருள். முடிதல்- மரணமடைதல். இது மே மரணம் வா’ என்றதன் பொருள். ‘யானோட்டியென்னுள்’ என்கிற இந்தப் பாசுரத்தின் வியாக்கியானத்தில் இந்த ச்லோகத்தை எடுத்து விவரிக்க வேண்டிய காரணமென்ன? என்று ஆராய்வோம்; மூலத்தில் எம்பெருமானை நான் விட்டாலும் அவன் என்னை விடான்’ என்றருளிச் செய்யப்புகுந்த ஆழ்வார். “நான் இசைந்து என்னுடைய ஹ்ருதயத்திலே இருக்கவேணும் என்றிலேன்; அவ்வெம் பெருமான் தானாகவே ப்ரதிக்ஞைபண்ணிக்கொண்டு என்னுள்ளே புகுந்தருளினாகலால் இப்படி நிர்ஹேதுகமாக அடியேனை விஷயீகரித்த அவன் நான் அகன்றுபோவதை இசைந்திடுவனோ?” என்றருளிச் செய்திருக்கிறார். ஆழ்வார் விஷயத்திலே எம்பெருமான் ப்ரதிஜ்ஞை பண்ணினதாகச் சொல்லப்பட்டிருந்கிறதே. இது எப்படிப்பட்ட ப்ரதிக்ஞை’ என்று கேள்வியான, இதற்கு இராமபிரானுடைய ஓர் பிரதிக்ஞையை எடுத்துக் காட்டினார் நம்பிள்ளை. கடலரசனுடைய ஸ்தானத்தில் ஆழ்வாரும், இராமபிரானுடைய ஸ்தானத்தில் எம்பெருமானுமாகக் கொள்ளவேணும், கொண்டு, “அத்யமே மரணம் வா” என்கிற ச்லோகத்திற்கு ‘ஸமுத்ரத்தை முடிக்கவாவது அதை நான் கடக்கவாவதுவேணும்’ என்பதாகப் பொருளுரைத்தால் தார்ஷ்டாந்திகத்தில் ‘ஆழ்வாரைக் கொல்லவாவது…’ என்பதாக ப்ரதிஜ்ஞையின் ஆகாரம் கூற வேண்டும். இஃது எங்ஙனே பொருந்தும்?

ஸ்ரீராமாயண ப்ரகரணத்திற்கும் ஈட்டில் உதாஹரித்த ப்ரகரணத்திற்கும் கவிஹ்ருதயத்திற்கும் ச்லோகசைலிக்கும் சிறிதேனும் ஸம்பந்தமின்றியே அரும்பதவுரைகாரர் எழுதியுள்ளபொருள் ப்ராமாதிக மென்பதையும் ப்ரமாதத்தின் நிமித்தத்தையும் ஈட்டு ஸ்ரீஸூக்தியின் உண்மையான நிலைமையையும் ஈண்டு நன்கு நிரூபித்தாயிற்று.

(என் தனிநெஞ்சை வஞ்சித்து இத்யாதி.) ஸர்வசத்தனான தன்னாலுந் திருத்தவொண்ணாதபடி ஸ்வாதந்திரியத்தில் தலைநின்று அவிதேயமாய்க் கிடந்த எனது நெஞ்சைத் தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு விதேயமாம்படி பண்ணி, அபிமதவிஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே என்னுடைய ஹேயமானவுடலைப்பற்றி நின்று என் பக்கலிலே விலக்காமை பெற்றவாறே என்னாத்மாவோடும் வந்து கலந்து இதுவே போதுபோக்காகவிருந்து இப்படி நிர்ஹேதுகமாக என்னை விஷயீகரித்தவன், நான் தன்பக்கலில் நின்றும் நெகிழ்ந்துபோவனென்றால் அவன் இசைய ப்ரஸக்தியுண்டோ? எனக்கு ஞானம் பிற்கைக்க க்ருஷிபண்ணி, பிறந்த ஞானம் பலிக்குமளவானகாலத்திலே நான் அகன்றுபோவேனென்றால் அவனோ அகலவொட்டுவது?

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here