Neeladevi Part 2

0
1,126 views

This article on Neela Devi (நீளாதேவி) is written by Poigaiadiyan swami…

செய்தி கேட்ட ருக்மி தன் படைகளுடன் கண்ணனின் தேரைத் துரத்திவர, கண்ணன் எய்த பாணங்களை எதிர்க்க முடியாமல் தோற்றுத் திரும்பி னான். துவாரகையை அடைந்த கண்ணன் ருக்மணியை மணந் தான். இந்த ருக்மணிதான் ஸ்ரீதேவியின் அம்சம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

ஸத்ராஜித் என்பவன் துவாரகையில் வசித்து வந்தான். அவன் சூரிய பகவானின் உபாசகன். அவன் பக்திக்கு மகிழ்ந்த சூர்ய பகவான் அவனுக்கு “ஸ்யமந்தகமணி” என்ற ஓர் அழகிய அபூர்வ ரத்தினத்தை அன்பளிப்பாகத் தந்தான். அந்த மணி இருக்கும் இடம் சுபிட்சமாக இருக்கும். அதனால் அந்த மணியை உக்ரஸேன மன்னனுக்குத் தரும்படி கண்ணன் கேட்க ஸத்ராஜித் கொடுக்க மறுத்துவிட்டான்.

ஸத்ராஜித்தின் தம்பியான ப்ரசேனன் ஒருநாள் அந்த மணியைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று மணியை எடுத்துச் சென்றது. அந்தச் சிங்கத்தைக் கொன்று ஜாம்பவான், அந்த மணியைத் தன் பாலகனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தான்.

ப்ரசேனனைக் கொன்று அந்த மணியைக் கண்ணன்தான் அபகரித் திருப்பான் என்று ஸத்ராஜித் நம்பினான். கொலைப்பழி தன் மீது விழுந்ததால் அதனைப் போக்க கண்ணன் காட்டில் தேடிக் கொண்-டுவர, ஒரு குகை வாசலில் ஒரு குழந்தை அதை வைத்து விளை-யாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்தச் சிறுவனை நெருங்க, அதைக் கண்ட ஜாம்பவான் கண்ணனுடன் போர் புரிந்தான்.

இருபத்தியெட்டு நாட்கள் நடந்த போரில் ஜாம்பவான் தோற்று முடிவில் தன் மகள் ஜாம்பவதியுடன் சேர்த்து அந்த மணியைக் கண்ணனுக்கே அளித்தான்

அந்த ஸ்யமந்தகமணியை, கண்ணன் திரும்ப ஸத்ராஜித்திடமே கொண்டு வந்து கொடுத்து தன் மீது விழுந்த பழியைப் போக்கிக் கொண்டான். தான் செய்த பிழையை உணர்ந்து ஸத்ராஜித் தன் மகளான சத்தியபாமாவைக் கண்ணனுக்கே மணம் முடித்து வைத்தான்.

அந்த சத்யபாமாவே, பூதேவியின் அவதாரம்.

அப்படியானால், நீளாதேவியின் அவதாரமாகப் பிறந்தவள் யார்?

“நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!” என்கிறாள் ஆண்டாள் தம் திருப்பாவையில். நந்தகோபனின் மகனாக வளர்ந்தவன் கண்ணன். நந்தகோபன் மருமகள் என்றால் கண்ணனின் மனைவி என்றுதானே பொருள்! அது மட்டுமா?

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்” என்று நப்பின்னையின் பெருமையைக் கூறித் துயில் எழுப்புகிறாள் ஆண்டாள் தம் திருப்பாவையில். கண்ணனின் பெருமைகளைக் கூறப் புகுந்த ஆண்டாள் ருக்மணியைப் பற்றியோ, சத்யபாமையைப் பற்றியோ கூறவில்லை,நப்பின்னையைத்தான் குறிப்பிடுகிறாள்

ஆயர்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியே ஆண்டாள் கூறுகிறாள். நந்தகோபன் மருமகள் என்று குறிப்பிடுகிறாள்.

இந்த நப்பின்னையின் கதையை இப்போது பார்ப்போம்.

கண்ணனின் தாய் யசோதைக்கு கும்பன் என்ற சகோதரன் இருந் தான். அவன் மகளே இந்த நப்பின்னை. அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய நப்பின்னை பருவ வயதை அடைந்தாள்.

தன் அத்தை மகனான கண்ணனையே மணக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். முறைப் பையனான கண்ணனை முறைப்படி மணக்க ஆசைப்பட்டதில் தவறில்லையென்றாலும் ஒரு தடை இருந்தது.  தடையா? அது என்ன?

அந்தக் கும்பனே சிறந்த வீரன். அதுமட்டுமல்ல. அவன் ஏழு எருது-களைச் (காளைகளை) செழிப்பாக வளர்த்து வந்தான்.  உண்டு மட்டுமே வளர்ந்து வந்ததால் அந்தக் காளைகள் முரட்டுக் காளைகளாக வளர்ந்தன. அந்த நாள்களில் மன்னர்கள் தன் மகளை, சிறந்த வீரனுக்கே மணமுடிக்க ஆசைப்படுவார்கள். மகளுக்குச் சுயம்வரம் என அறிவித்து அந்நாளில் அதற்காகப் போட்டிகள் வைப்பார்கள்.

அவ்வகையில் தன் ஏழு காளைகளை ஒரே நேரத்தில் அடக்கும் காளைக்கே தன் மகள் என அறிவித்தான் கும்பன். தன் சகோதரியின் மகன் என்ற காரணத்திற்காகவோ தன் மகள் விரும்புகிறாள் என்பதற்காகவோ கண்ணனுக்கு அவன் தன் மகளை மணம் முடித்து வைக்க விரும்பவில்லை. தன் அறிவிப்பிலிருந்து பின்வாங்க-வில்லை.

கேள்வியுற்ற இளைஞர்கள் நப்பின்னையை மணக்கும் ஆசையில் காளைகளுடன் போரிட்டதில் உயிரை மாய்த்துக் கொண்டனர் சிலர். படுகாயமடைந்தனர் பலர்.  கண்ணன் காதிற்கும் செய்தி எட்டியது. நப்பின்னையின் மனத்தையும் அறிந்த அவன் போட்டிக்கு வந்தான். எல்லோரும் அவனைத் தடுத்தனர். யசோதை அழுதே விட்டாள். அவள் கண்ணனை இன்னும் குழந்தையாகவே பார்த்துக் கொண்டி-ருக்கிறாள்.  அவன் செய்த லீலைகளை எல்லாம் மறந்தவளாய் அவனைத் தடுத்தாள்.

நப்பின்னையோ தன்பொருட்டு கண்ணன் காளைகளால் கொல்லப் படுவதை விரும்பவில்லை. அதே நேரம் அவன் ஒருவேளை காளை களை அடக்கிவிட்டால்? ஆசை யாரை விட்டது?

கண்ணன் தன்னை ஏழு உரு-வங்களாக மாற்றிக் கொண்டான். ஒரே சமயத்தில் அந்த ஏழு காளை கள் மீதும் பாய்ந்து அவற்றுடன் உருண்டு புரண்டு அவற்றை அடக்கி அணைத்துக் கொண்டே நப்பின்னையை நோக்கினான். “ இதுபோல் உன்னையும் அணைப்பேன்” என்பதுபோல் ஒரு காதல் பார்வையுடன்.

பிறகு கண்ணன்…. நப்பின்னை திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நப்பின்னைதான் நீளாதேவியின் அவதாரமாகப் பிறந்தவள்.

இந்த நிகழ்ச்சியைத்தான் நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் “எருதேழ் அடர்ந்த கள்ள மாயனே” என்று கண்ணனைப் புகழ்கிறார்.

திருமழிசை ஆழ்வாரோ தம் திருச்சந்த விருத்தத்தில் “ஆயனாகியாயர்மங்கை வேய தோள் விரும்பினாய்” என்கிறார்.

இந்த நீளாதேவி, நிகளாபுரி மன்னனின் மகளாய் வளர்ந்து உறையூர்ப் பெருமானான அழகிய மணவாளனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டு ‘உறையூர் நாச்சியார்’ என்ற பெயரில் திகழ்வதாகக் கூட சிலர் கூறுவதுண்டு.

இத்தகைய பெருமைகளையும், புகழையும் கொண்ட தேவியைக் கீழ்க்காணும் நீளா சூக்தத்தைச் சொல்லி வணங்குவோம்.

நீளாம் தேவீகும் ஸரணமஹம் ப்ரபத்யே
ஸுதரஸிதரயே நம : க்ருணாஹி!
க்ருதவதீ ஸவிதாராதிபத்யை : பயஸ்வதீ
ரந்திராஸாநோ அஸ்து!
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ந்யகோரா
ஸ்யேஸாநா ஸஹஸோயா மாநோதா!
ப்ருஹஸ்பதிர் மாதரிஸ்வோத வாயுஸ
ஸ்ந்துவாநா வாதா அபிநோக் க்ருணந்து!
விஷ்டம்போ திவோ தருண : ப்ருதிவ்யா
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணுபத்நீ!
மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ந்யை ச தீமஹி!
தந்நோ நீளா ப்ரசோதயாத்!
ஹரி : ஓம்

தண்ணீர் எப்படி நம் உடல் அழுக்கைப் போக்கி நம்மைச் சுத்தமாக ஆக்குகிறதோ அது போன்று நம் மன அழுக்கை நீக்கும் இந்த நீளா சூக்தத்தை நாமும் தினமும் சொல்லி, அந்த எம்பெருமானின் மனத்தைக் குளிர்வித்து அவன் கருணைக்குப் பாத்திரர்களாவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here