Sri Vedantha Desika Vishaya Stothramala

0
1,481 views

நிஸ்ரேயஸம் யேபிலஷந்தி தஸ்ய
மூலம் க்ருபாம் சாபி ரமாஸகஸ்ய|
தயாம் யதீந்த்ரஸ்ய ஹி தைரவஸ்யம்
கார்யா ஹி பக்தி: கவிவாதிஸிம்ஹே||

மேற்கண்ட அத்யத்புதமான ஸ்லோகம், ஸ்ரீ குமார வரதாசார்யரின் ஸத்சிஷ்யரான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச்செய்த ‘ஸப்ததி ரத்ந மாலிகா’ என்கிற ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் விஷயமான ஸ்தோத்ர க்ரந்தத்திலுள்ளது. இதன் பொருளாவது, “பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையும், மோக்ஷ ஹேதுவான பகவத் க்ருபையையும், ஸ்ரீ பாஷ்யகாரரின் அனுக்ரஹத்தையும் அபேக்ஷிப்பவர்கள், ஸ்வாமி ஸ்ரீதேசிகனிடம் பக்தி செய்தாக வேண்டும் என்பதேயாம்.

கலியுகத்தின் ‘வேதாந்த சாஸ்த்ர ப்ரவர்த்தகர்’ என்று நம் தூப்புல் புனிதரான ஸ்வாமி ஸ்ரீதேசிகனாலே தம் ‘ஸம்ப்ரதாய பரிசுத்தி’ என்கிற ஸத் க்ரந்தத்தில் ஸாதிக்கப்பட்ட ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தரான ஸ்வாமி ஸ்ரீநம்மாழ்வாரால் தம்முடைய சரம ப்ரபந்தமும் ஸாமவேத ஸாரமுமான திருவாய்மொழியில் (பாசுரம் 4-10-8),

“புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை
நக்கபிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே”

என்று ஸாதிக்கப்பட்டவாறும், நம் தூப்புல் மாலான ஸ்வாமி ஸ்ரீதேசிகனால் தம்முடைய ப்ரபந்தத்தில்

“ஊன் தந்து நிலைநின்ற உயிரும் தந்து . . . . வான் தந்து மலரடியும் தந்து வானோர்தம் வாழ்ச்சி தர மன்னருளால் வரித்திட்டானே”

என்று ஸாதிக்கப்பட்டவாறும் திணைத்தனையும் திருமகளை விடாத திருமாலே, ஸ்ரீமந் நாராயணனே மோக்ஷப்ரஸாதி என்பது ஸாஸ்த்ரோக்தமான தெளிந்த முடிவு.ஸர்வலோக சரண்யனான அந்த பகவானே, காசி முதலாய நன்னகரியெல்லாம் ஒவ்வாத புகழையுடைய கச்சியில் (பெருமாள் கோயிலில்) ஸ்ரீபேரருளாளனாக ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் மூலம், ஸ்ரீபகவத் ராமாநுஜருக்கு ‘அஹமேவ பரம் தத்வம்’ ‘உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்’ முதலிய ஆறு வார்த்தைகளை அருளிச்செய்து ஸித்தாந்த ஸ்தாபனம் பண்ணியருளினான். தாம் ஸ்தாபித்த ஸித்தாந்தம் மேன்மேலும் அபிவ்ருத்தி அடைந்து அண்டத்துயிர்களெல்லாம் கடைத்தேறுதற் பொருட்டு ஸ்ரீ பகவத் ராமாநுஜர் மூலம் ப்ரவர்த்திப்பித்தும் அருளினான். அதே பகவான் தான், பின்னாளில் நம் ஸித்தாந்தத்துக்கு மதாந்தரஸ்தர்களால் உபத்ரவம் வந்தபோது நம் ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்வாமி ஸ்ரீதேசிகனாகத் திருவவதாரம் பண்ணியருளி ஸித்தாந்தத்தை போஷிக்கவும் செய்தருளினான்.

சரணாகத ரக்ஷகனான ஸர்வேஸ்வரன், தன் பரம க்ருபையாலே, சேதனர்கள் உஜ்ஜீவிக்கும் பொருட்டு அளவிடமுடியாத ப்ரயத்னங்கள் செய்தும் திருவுள்ளம் த்ருப்தியடையாத நிலையில் அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களையும், ஆசார்ய ச்ரேஷ்டர்களையும் அவதரிக்கச் செய்த க்ரமத்தில் அனந்தாம்ஸ ஸம்பூதரான ஸ்ரீபகவத் பாஷ்யகாரரை திருவவதாரம் செய்வித்து ” யதிராஜோ ஜகத்குரு:” என்கிறபடிக்கு ஜகதாசார்யராய் எழுந்தருளியிருக்கச் செய்தும்

“மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே”

என்று திருவரங்கத்தமுதனாரால் போற்றப்பட்டபடிக்கு எண்ணிறந்த சேதனர்களை, ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடி
ஸம்பந்தத்தால் அந்தமில் பேரின்பத்து அடியாராக அபராஜிதாவிலே சேர்த்துக் கொண்டான்.

“உண்ணின்று உயிர்கட்கு உற்றனவே செய்து . . . . . விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்” என்று அமுதனாராலே போற்றப்பட்ட ஸ்ரீபகவத் பாஷ்யகாரர், நீசச் சமயங்களை மாளச்செய்தும், தென்குருகை வள்ளலான ஸ்வாமி நம்மாழ்வாரின் வாட்டமில்லாத வண்தமிழ் மறைகளை வாழச்செய்தும், நாரணனைக் (அடையப்படும் பொருளாகக்) காட்டிய வேதம் களிப்புறும்படிக்கு ப்ரபத்தி தர்மத்தை ஓங்கச்செய்து ஸத்ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகம் செய்தருளினார். இதையொற்றியே நம் ஸம்ப்ரதாயமும் ‘எம்பெருமானார் தர்ஸனம்’ என்றே வழங்கப்படலாயிற்று.

அத்தகைய தன்னிகரற்ற, பரம வைதிக ஸித்தாந்தமான நம் ஸம்ப்ரதாயத்துக்குப் பின்னாளில் மதாந்தரஸ்தர்களால் உபத்ரவம் வந்தபோது, கலியுக வரதனான திருவேங்கடமுடையானும், போற்றருஞ்சீலத்திராமாநுசனும் ஸ்ரீதூப்புல் திருவேங்கடமுடையானாகத் திருவவதாரம் செய்தருளி நம் தர்ஸனத்தை போஷித்தருளினர். திருவரங்கத்தில், துருஷ்கர்களால் உபத்ரவம் வந்தபோது, ஸ்ரீ ஸுதர்சன பட்டர் அருளிய ‘ச்ருதப்ராகாசிகா’ என்ற ஏற்றமிகு ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானத்தை ரக்ஷித்தும், தகுந்த அதிகாரிகள் மூலம் பரவர்த்தித்தும் ப்ரவர்த்திப்பித்தும் அருளினர்.

ஆகையால் ஸ்ரீதேசிகன் ஸாக்ஷாத் திருவேங்கடமுடையானுடையவும் ஸ்ரீபாஷ்யகாரருடையவும் அபராவதாரம் என்பது ஸ்பஷ்டம். இப்படி பலபடிகளாலும் ஸ்வாமி ஸ்ரீதேசிகன், பகவானைப் போலவும் பகவத் பாஷ்யகாரரைப் போலவும் சேதனோஜ்ஜீவனமே லக்ஷ்யமாய் எழுந்தருளியிருந்தார். பகவானால் ஸ்தாபிக்கப்பட்டும் இராமாநுசரால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்டும் விளங்கிய நம் ஸத்ஸம்ப்ரதாயத்துக்கு பங்கம் வந்தபோது குத்ருஷ்டிகளையும் மதாந்தரஸ்தர்களையும் வாதத்தால் நிரஸனம் செய்தும் கரந்த நிர்மாணங்களின் மூலம் ஸித்தாந்தத்தை ரக்ஷித்தும் போஷித்தும் அருளினார் ஸ்வாமி ஸ்ரீதேசிகன். அதுமுதல் நம் ஸத்ஸம்ப்ரதாயம் ‘ஸ்ரீதேசிக தர்ஸனம்’ என்றே இன்றளவும் வழங்கப்படுகிறது, பொன்றுந்துணையும் வழங்கப்படும். இந்த அநிதர ஸாதாரணமான ஸாம்யத்தாலும் அத்விதீயமான கீர்த்தியினாலும் தான் மேற்கண்ட ‘ஸப்ததி ரத்ந மாலிகா’ ஸ்லோகத்தில் அவ்வாறு உரைக்கப்பட்டது. இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம் என்னவென்றால், “இந்த கொடுங்கலியில் எப்படி ப்ரபத்தி அநுஷ்டிக்காதவர்களுக்கு மோக்ஷமில்லையோ, அப்படியே ஸ்ரீதேசிக பக்தி இல்லாதவர்க்கும் (அவர்கள் இதைத் தவிர பிற தகுதிகள் அனைத்தும் பூரணமாக உடையவர்களானாலும் சரி) மோக்ஷமில்லை” என்பதே.

ஆக ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் அளப்பரிய வைபவங்களை, லோகத்தில் தம்மைக்காட்டிலும் ஸாத்விகரில்லாத ஏற்றமுடைய ஸ்ரீதேசிகனடியார்கள் (தேசிகோ நிகமாந்தார்யாத், தத்பக்தாத் ஸாத்விகோ ஜந: – ஸ்ரீமத் வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகா), நம் ஸ்ரீதேசிக தர்ஸனத்தின் பூர்வாசார்யர்கள் ஸ்வாமியின் விஷயமாக அருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் அனைத்தையும் வாசித்து அவர்தம் அம்ருதமயமான மஹாவைபவங்களை வாசித்தும் ஏத்தியும் பரப்பியும் தேசிகபக்தி மேலிட்டு வாழ்வதென்பது மஹா புருஷார்த்தமாகும்.இது ஆவச்யகமும் கூட. இதன் ஆவச்யகத்தைத் திருவுள்ளம் பற்றிய ஸ்ரீமத் வேதமார்க ப்ரதிஷ்டாபநாசார்யேத்யாதி ப்ருதாலங்க்ருத பரம. பரி. வைகுண்டவாசி. பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீகோபால தேசிக மஹாதேசிகன், ஸ்ரீதேசிகன் அருளிய ஸ்ரீஸூக்திகளை ப்ரகாசனம் செய்தருளியதோடு ‘குரும் ப்ரகாசயேத்’ என்கிறபடிக்கு நம் பரமாசார்யரான ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் ஒப்பும் மிகையும் இலாததான கீர்த்தியை பரவச்செய்தற் பொருட்டு ஸ்வாமி ஸ்ரீதேசிகன் விஷயமான ஸ்தோத்ர நூல்களையும் ப்ரபந்தங்களையும் ப்ரகாசனம் செய்யத் திருவுள்ளம் கொண்டு ஸ்ரீமத் திருக்குடந்தை தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீதேசிக திவ்ய ஸஹஸ்ரநாமத்தையும், ஸ்ரீ வேங்கட பாட்டரார்யர் அருளிய ஸ்ரீமந் நிகமாந்த தேசிக நாமாஷ்டோத்தர சதத்தையும் தமிழுரையுடன் தம் திருக்கரங்களாலே வெளியிட்டருளியுள்ளபடி. இந்த க்ரமத்தில் மஹா வித்வத் ச்ரேஷ்டரும் தேசிக தர்ஸனத்தின் ஸிம்ஹங்களில் ஒருவராகவும் ஆத்மகுண பூரணராயும் விளங்கும் ஸ்ரீமத் வேதமார்கேத்யாதி. உ.வே. திருவள்ளூர். திருமலை. ஈச்சம்பாடி. ரங்கநாதாசார்யார் ஸ்வாமியைக் கொண்டு அவர்க்கே உரிய அந்யாத்ருசமான எளிய நடையில் தமிழுரையுடன் “ஸ்ரீமத் வேதாந்த தேசிக விஷயக ஸ்தோத்ர மாலா” என்கிற பொக்கிஷம், ஸ்ரீமத் வேதமார்கேத்யாதி ப்ருதாலங்க்ருத. பரம. பரி. ப்ரக்ருதம் ராயபுரம் ஸ்ரீமதாண்டவன். ஸ்ரீ ரகுவீர மஹாதேசிகனின் திருக்கரங்களால் வெளியிட்டாயுள்ளபடி. இந்த அநிதரஸாதாரணமான மஹோபகாரம் ஸ்ரீதேசிகனடியார்களான நமக்கு மஹா வரப்ரஸாதம்.

இந்தப் பொக்கிஷத்தில் (புத்தகத்தில்) அடங்கியுள்ள ஸ்வாமி ஸ்ரீதேசிகன் விஷயமான ஸ்ரீஸூக்திகள்:

1. ஸ்ரீ குமார வரதாசார்யர் அருளிச் செய்தவை:

அ) ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரார்த்தனாஷ்டகம்
ஆ) ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி
இ) ஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா
ஈ) ஸ்ரீமத் வேதாந்த தேசிக விக்ரஹ த்யாநம்
உ) ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களாசாஸனம்
ஊ) பிள்ளையந்தாதி

2. ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிய ‘ஸப்ததி ரத்ந மாலிகா’

3. ஸ்ரீ கந்தாடை மன்னப்பங்கார் ஸ்வாமி அருளிய ‘ஸ்ரீதேசிக நூற்றந்தாதி’

4. ஸ்ரீ வேங்கட பாட்டராசார்ய ஸ்வாமி அருளிய ‘ஸ்ரீமந் நிகமாந்த தேசிக நாமாஷ்டோத்தர சதம்’

5. ஸ்ரீ த்ருதீய ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர (?) ஸ்வாமி அருளிய ‘ ஆசார்யாவதார கட்டார்த:’

6. ஸ்ரீ வேங்கடேச குரு அருளிய ‘ஸ்ரீமத் வேதாந்த தேசிக கத்யம்’

7. ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

8. ஸ்ரீ சேட்டலூர் நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி அருளிய ‘ஸ்ரீ தேசிகன் திவ்ய சரித்திர ஓடம்’

ஆக மொத்தம் 13 ஸ்ரீஸுக்திகள்.

இந்த ஸ்ரீகோசத்தை எளிய தமிழில் இனிமையான சைலியில் ஸ்ரீதேசிக பக்தி மணம் கமழ உரை செய்துள்ள ஸ்ரீ.உ.வே. தி.தி.ஈ. ரங்கநாதாசார்ய ஸ்வாமியின் திருவடிகளுக்கும், இந்த அந்யாத்ருசமான ஸத்கார்யத்துக்கு அடிகோலிய ஸ்ரீமத் வேதமார்கேத்யாதி ப்ருதாலங்க்ருத பரம. பரி. வைகுண்டவாஸி. பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன். ஸ்ரீ கோபால தேசிக மஹாதேசிகன் திருவடிகளுக்கும், இந்த உன்னத கைங்கர்யத்தை இப்பவும் பாங்காக நடத்தியருளிக் கொண்டு வரும் ஸ்ரீமத வேதமார்கேத்யாதி ப்ருதாலங்க்ருத. பரம. பரி. ராயபுரம் ஸ்ரீமதாண்டவன். ஸ்ரீ ரகுவீர மஹாதேசிகன் திருவடிகளுக்கும் புந: புந: தண்டவத் ப்ரணாமங்களை ஸமர்பிக்க ஸ்ரீதேசிகனடியார்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஸாத்விகத்தண்மையுடைய ஸ்ரீதேசிகனடியார்களின் ஸ்ரீதேசிகானுபவத்துக்காக, இந்த அத்யத்புதமான ஸ்ரீகோசத்திலிருந்து சில ரத்தினங்கள்:

1) தஞ்சமாகும் திருவடிகள்:

ஸ்ரீமத் வேங்கடநாதார்ய! த்வதீய சரணத்வயம்|
பவத்வத்ர பரத்ராபி மதீயம் சரணம் ஸதா||

(பொருள்: ஸர்வ(தந்த்ர) ஸ்வதந்த்ரரும், பகவதவதாரமுமான ஸ்வாமி ஸ்ரீ தேசிகனே! ஆசார்ய ஸார்வபௌமரான தேவரீரின் சீரிய திருவடிகளே இந்த லீலா விபூதியிலும் அந்த அப்ராக்ருதமானதும் ஸுத்த ஸத்வமயமானதுமான நித்ய விபூதியிலும் தஞ்சமாக அமைய வேண்டும்)
– ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரார்த்தனாஷ்டகம்

2) உய்விக்கும் திருவடிகள்:

வித்ராவிதோத்பட விகார ரஜோகுணௌ தௌ
விக்யாத பூரிவிபவேந ரஜ: கணேந!
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ
வேதாந்தஸூரி சரணௌ சரணம் ப்ரபத்யே||

(அளவிட அரியதான பெருமைகள் வாய்ந்த திருவடித் துகளாலே (தீர்த்த மஹிமையால்
எதிர்த்தவரையும் தாஸராக்கிப் பின்னும் தீர்த்தப்பிள்ளை தோன்றக் கரணமான
திருவடிகளாயிற்றே!) ரஜோ குணத்தைப் போக்கடித்து உலகை உய்விக்கும் ஸ்வாமி
ஸ்ரீதேசிகனின் திருவடிகளை அடைக்கலம் புகுகிறேன்)

– ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

*** இங்கு திருவடித் துகள்கள் என்று குறிப்பிடாமல் துகள் என்றே குறிப்பிடப்பட்டிருப்பது ரஸம்.
“பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஓரொன்று தானே அமையாதோ” என்றாற் போல் உலகை உய்விக்க திருவடிகளினுடைய ஒரே ஒரு துகளே போதும் என்று தாத்பர்யம்.

3) நிஜார்த . . . . . . முநே: ஸடாரேரிவ மூர்த்திபேதம்

(பொருள்:
தூப்புல் மாபுருடனான ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவிக்கும் போது த்ராவிட வேத ஸாகரத்தை அருளிய ஸ்வாமி நம்மாழ்வாரின் மறுமூர்த்தியோ? என்று எண்ணத் தக்கதாய் எழந்தருளி ஸேவை ஸாதிக்கிறார்)
– ஸ்ரீமத் வேதாந்த தேசிக விக்ரஹ த்யாநம்

*** ஸ்வாமி நம்மாழ்வார் த்ரமிடோபநிஷத் அருளினாற்போல் நம் ஸ்வாமியும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய
ரத்னாவளியும் ஹ்ருதயமும் அருளியுள்ளாரே!

4) வேங்கடேசாவதாரோயம்தத்கண்டாம்சோ தவாபவேத்|
யதீந்த்ராம்சோ தவேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம்||

(பொருள்: ஸாக்ஷாத் கலியுக வரதனான திருவேங்கடமுடையானின் திருவவதாரமும், திருவேங்கடவன் திருமணியின் அம்சமும், திருப்பாவை ஜீயரான ஸ்ரீபகவத் பாஷ்யகாரரின் அபராவதாரமும் ஆனவர்
அருட் தூப்புல் வள்ளல்)
– ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களாசாஸனம்

5) மாநிலத்தோதிய மாமறை . . . . . . ஊனமில் தூப்புலம்மான் ஓர் புகழ் அன்றி உய்வில்லையே!

(பொருள்: வேத வேதாந்தங்களில் ஸாதிக்கப்பட்டுள்ள தத்வார்த்தங்களின் ஸாரங்களை அருளும்
ஸ்ரீ பகவத் ராமாநுஜ முனிவரின் புகழைப் பாடும் ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் புகழைப் பாடுவதே நாம் உஜ்ஜீவிக்க வழி.

* * இது தவிர வேறு உஜ்ஜீவன ஹேது இல்லை என்று தாத்பர்யம்)
– பிள்ளையந்தாதி

6) அபி ச பவாஹி . . . . . . நிகமாந்த தேசிக கிர:

(பொருள்: வேண் பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரியன் என்று இயம்ப நின்ற ஸ்வாமி
ஸ்ரீதேசிகனின் திவ்யஸூக்திகள், ஸம்ஸாரமாகிற ஸர்பத்தால் கடியுண்டு நினைவிழந்து நிற்கும் ஸம்ஸாரிகளைத் தெளிவிப்பவை; புலனடக்கம், பாபத்தைக் கண்டு பயப்படுதல், பகவத் பாகவத பக்தி, மோக்ஷம், இவற்றை (ஸ்ரீஸூக்திகளை ஸேவிப்போர்க்கு) அருளுபவை. சப்தாதி விஷயங்களில் ஈடுபாடு, கோபம், மதம்,மோஹம், லோபம், கபடம் முதலிய குற்றங்களை அழிப்பவை. இவை போன்ற சீரிய ஸ்ரீஸூக்திகள் இப்போது உலகில் எங்குமில்லை)

– ஸப்ததி ரத்ந மாலிகா

7) அவர்க்காம் தெளிவிசும்பில் அந்தமில் பேரின்பம் . . . . . .
. . . . . . . . . . . . . . . அவமாம் மற்றோர் பேசும் சொல்

(பொருள்: பரமாத்ம ஸ்வரூபியான ஸ்வாமி ஸ்ரீதேசிகன், தம்மை சிந்தனம் செய்பவர்களைப் பாதுகாத்து அவர்களுக்குப் பரமபத ப்ராப்தியும் நல்குவார். மற்றையோர் பாதுகாப்பர் என்று சொல்வதெல்லாம் வீண்
வார்த்தையேயாகும் (சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்)!
– ஸ்ரீதேசிக நூற்றந்தாதி

இந்த ஸ்ரீகோசத்தை ஸேவிப்பதால் (வாசிப்பதால்) வரும் பலன்கள்:
(இதில் அடங்கியுள்ள ஸ்ரீஸூக்திகளின் பலச்ருதியில் சொல்லப்பட்டுள்ளவை)

1) ஸ்திரமான தேசிக பக்தி உண்டாகும்
2) பொருளற்றாரையும் பொருளாக்கும்
3) ஸகல பாபங்களும் நாசமாகும்
4) இந்த லீலா விபூதியிலேயே, நித்ய விபூதியில் கிடைக்கும் மோக்ஷானந்தத்துக்குத் துல்யமான பரமானந்தம் கிடைக்கும்
5) ஸர்வ மங்களங்களும் உண்டாகும்
6) ஸ்ரீதேசிகனின் திருவடிகள் சிரஸில் சேரும்
7) ஸகல புருஷார்த்தங்களும் கிடைப்பதோடு ஸ்ரீபகவத் பாஷ்யகாரருடையவும் பகவானுடையவும் அநுக்ரஹம் உண்டாகும்
8) அசுபங்கள் போகும்
9) தேசிக பக்தி மேன்மேலும் வளரும்

இதற்கு மேல் உயர்பலன்கள் உலகில் வேறு உளவோ ? ? ?

தா(நீ)ஸன் செய்யும் விண்ணப்பம்:

இத்தகைய உயர்ந்த பலன்களெல்லாம் ஒருங்கே பெற்று உய்ய இந்த ஸ்ரீகோசத்தை வாங்கி வாசித்து மகிழ ஸ்ரீ தேசிகனடியார்களைப் ப்ரார்த்திக்கிறேன். தேசங்களெங்கும் தேசிக பக்தி பரவி செழித்து வளர திவ்ய தம்பதிகளின் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

புத்தகத்தின் பெயர்: ஸ்ரீமத் வேதாந்த தேசிக விஷயக ஸ்தோத்ர மாலா (எளிய தமிழுரையுடன்)

விலை: ரூ. 70 மட்டுமே (ஸப்தாதி விஷயங்களில் பற்றறுக்கும் ஏற்றமுடைய இந்த ஸ்ரீகோசம் வெறும் ஸப்ததி ரூபாய்களுக்கே கிடைப்பது வாசாமகோசரமான ஆச்சர்யம் தான்)

கிடைக்கும் இடம்:

ஸ்ரீமதாண்டவன் பௌண்டரீகபுரம் ஸ்வாமி ஆஸ்ரமம்,
43-A/13, ஆஸ்ரமம் ரோடு,
ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006,
தமிழ்நாடு.
தொலைபேசி: 04312436100

தூப்புல் மாபுருடன் பாதம் வணங்குமினே!

Courtesy: ஸ்ரீ திருவெவ்வுள். ராகவந்ருஸிம்ஹன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here