Thula Kaveri Maahaathmyam – Part 8

1
2,032 views

Kaveri

From the mid of October month, the holy month of Thula (Aippasi in Tamil) starts and Thula Kaveri Snanam is an important religious occasion in this month. This article describes in detail about Thula Kaveri Maahaathmyam and will be beneficial for for those who plan to take dip in Holy Kaveri during Thula and equally too to those who can offer mAnasIka prayer to the river who can’t make it personally to the river during this month. This article is written by Sri U.Ve. sArasAragnar mahAmahOpAdhyAya perukkAraNai mAdabushi chakravarthyAchArya swAmi.

இவ்வாறு ஸூகரம் தாஸியின் கூந்தலில் பட்ட காவேரியின் நீர்த்திவலை தன் உடம்பில் பட்டதனால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு திவ்யரூபத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில் செல்வதைக் கண்டதும்அனைவரும் காவேரியைப் புகழ்ந்தனர். துலா மாதத்தின் பெருமையையும் எடுத்துக் கூறினர். பன்றியினால் துரத்தப்பட்ட பத்மகர்ப்பன் காவேரியில் ஸ்நானம் செய்து காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு அங்கு ஒரிடத்தில் உடகார்ந்திருந்தான். காயத்திரி முதலிய ஜபங்கள் செய்வதனால் ஒளியுடன் விளங்கிய அந்தப் பத்மகர்ப்பனின் அருகில் வந்து அங்குள்ள அந்தணர்கள் அவரை வணங்கி, “துலா காவேரியின் மகிமையை நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம். எங்களிடம் க்ருபை கூர்ந்து தேவரீர் காவேரி மஹிமையை அருளிச் செய்ய வேண்டும்” என்றனர். மேலும், “ஸ்நானம் செய்யும்போது யாரை மனத்தினால் நினைக்க வேண்டும்? இதற்கு சடங்குகள் யாவை? இதற்கு தேவதை எது என்பதையும் கூற வேண்டும்” என்றனர்.

இதைக் கேட்ட பத்மகர்ப்பன் காவேரி மகிமையைச் சொல்ல ஆரம்பித்தார். இந்த துலா காவேரியின் மகிமையைக் கூறுவதனாலும், இந்த புராணத்தை படிப்பதனாலும் கேட்பதனாலும் அளவற்ற பயன் கைகூடும். வேதங்களை ஓதுவதற்கு அதிகாரம் இல்லாதவர்களுக்கும், அதில் அதிகாரம் இருந்து தங்கள் தங்கள் தர்மங்களைச் சரிவர நடத்தி போருகிறவர்களுக்கும், பெண்களுக்கும் இந்த கதை அறியத்தக்கது. ஒவ்வொரு தினமும் ஒரு முகூர்த்த காலமாவது இதைக் கேட்க வேண்டும். ஸத்கதா ச்ரவணமும் எம்பெருமானின் திருநாமமுமே மனிதர்களுக்கு ஸகல க்ஷேமங்களையும் கொடுக்கவல்லது. கலியுகத்தில் இவை இரண்டும் விசேஷமாக சீக்கிரத்தில் பயனை அளிக்க கூடியன. புராணம் சொல்பவனை நாம் பூஜிக்க வேண்டும்.

அர்ச்சா மூர்த்தியில் லோஹபுத்தியை செலுத்துபவனும், ஆசார்யனை ஸாமான்யமான மனிதனாக நினைப்பவனும், கல்விகளையும் புராணங்களையும் கற்று எம்பெருமானின் கதையைச் சொல்பவனை அவமதிக்கிறவனும் அதோகதியை அடைவான். கதை சொல்பவன் பாலனாகவோ, வயது முதிர்ந்தவனாகவோ, தரித்திரனாகவோ இருந்தாலும் அவனிடத்தில் மதிப்பை செலுத்த வேண்டும். பெளராணிகர், வியாஸருடைய ஆஸனத்தில் அமர்ந்தவர். வியாஸரைப் போல் அவரை நினைக்க வேண்டும். புராணம் நடக்கும் வரையில் அவரிடத்தில் மிகவும் மரியாதையுடன் இருக்க வேண்டும்.

துஷ்டர்கள் உள்ள இடத்திலும், அக்கிரமங்கள் நடக்கும் இடத்திலும் புராணங்களைச் சொல்லக்கூடாது. மேன் மேல் ஸத்விஷயங்களை கேட்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களுக்கே ஸத்கதையைச் சொல்ல வேண்டும். நாம் ஒரு ஸபையை ஏற்பாடு செய்து அதில் முதன்மையை நாம் வஹித்துக் கொண்டு அதன் மூலமாக புராணங்களை நடத்தினால் நம்மை எல்லாரும் புகழ்வார்கள் என்று எண்ணியும், நம்மை இந்த பெளராணிகர் சென்ற இடமெல்லாம் புகழ்வார், இந்த ஸபையிலேயே புகழ்வார் என்று எண்ணியும் நடத்தப்படும் ஸபைகளுக்கு சென்று பெளராணிகர் ஸத்கதையைச் சொல்லக் கூடாது. மிகவும் ஆவலுடன் கூடியவர்களுக்கும், பரிசுத்தமானவர்களுக்கும், கதை சொல்லும் ஸமயங்களில் வேறு வேலையில் ஊற்றமில்லாதவர்களுக்குமே சொல்ல வேண்டும். அந்தணர்களே, நீங்களும் மிகவும் பக்தி ச்ரத்தையுடன் கதை கேட்க விரும்புகிறீர்கள். நானும் எம்பெறுமான் கதையைச் சொல்லி, என்னை புனிதனாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவன். எனவே துலா காவேரியின் மகிமையை சொல்கிறேன்.

வேதங்களில் புருஷஸூக்தம் சிறந்தது. மஹாபாரதம் புகழ்வதற்கு உரியது. மந்த்ரங்களில் காயத்ரி எனப் பெறும் மந்த்ரம் தலையாக உள்ளது. விரதங்களில் ஏகாதசி விரதம் மகிமை பெற்றது. இவற்றை யாவரும் அறிவர். அதுபோல் ஸ்நானங்களில் துலா ஸ்நானம், அதிலும் காவேரியில் துலா ஸ்நானம், அதிலும் ஸ்ரீரங்கம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் இரண்டு பக்கமும் ஓடுகிற காவேரியில் துலா ஸ்நானம் விசேஷமான சிறப்பைப் பெற்றது. ஒருவன் கோயிலைக் கட்டுகிறான். ஆஹாரம் முதலியவற்றுக்காக மடத்தை ஏற்படுத்துகிறான். கோயிலிலுள்ள எம்பெருமானைப் பூஜிப்பதற்கு வேண்டிய புஷ்பங்களுக்காக தோட்டத்தை அமைக்கிறான். நூல்களில் சொன்னபடி தவறில்லாமல் ராஜ்யத்தை பரிபாலிக்கிறான். இன்னமும் பல ஸத்காரியங்களை செய்கிறான். ஆயினும் இவற்றினால் என்ன பயன்? துலா மாதத்தில் காவேரியில் செய்த ஸ்நானத்துக்கு இவை ஒன்று சேர்ந்தாலும் நேராகா.

துவாதசியன்று நானாவிதமான அன்னங்களுடனும், பக்ஷ்யங்களுடனும் ஆயிரம் அந்தணர்களை ஆராதித்தால் என்ன பயன் கிடைக்குமோ அந்தப் பயன் துலா காவேரி ஸ்நானத்தினால் கிடைக்கும் என்பது திண்ணம். மாக மாதத்தில் ரத ஸப்தமியன்றும், வைசாகத்தில் பெளர்ணமியிலும் காவேரி ஸ்நானம் சிறப்புடையது. வைசாக மாதப் பெளர்ணமி முதல் கார்த்திகை மாதம் வரையில் இந்த காவேரியில் ஸ்நானம் செய்தும், செவிக்கினியதான இந்த மகிமையை கேட்டும் ‘என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்னும்படியான அரங்கநாதனை கண்ணாரக் கண்டும் இருப்பவன் அடையமுடியாத பயனையும் அடைவான். இப்படி இருக்கும் பெண் மலடு நீங்கி புத்திரனைப் பெறுவாள். இந்த புராணத்தை தாம்பூலம் பழம் கர்ப்பூரம் முதலியவற்றினால் பூஜித்து இந்த கதையை கேட்பவர்களுக்கு வறுமையும் பாவமும் தாமாகவே விலகி தூறுகள் பாய்ந்துவிடும்.

கதையைக் கேட்பதற்கு உரிய நிபந்தனைகள்

புராணத்திலும், இதில் சொல்லும் விஷயத்திலும், இதைச் சொல்பவரிடத்திலும் பக்தியும் வணக்கமும் வேண்டும்; மேன்மேல் என்ன விஷயம் வருமேன்று ஆழ்ந்து நோக்க வேண்டும். புராணம் நடக்கும்போது நடுவில் வெளியில் செல்லாமல் இருத்தல் வேண்டும். அப்படி செல்பவன் தன் செளகரியத்திலும் செல்வத்திலும் பாதியை இழந்துவிடுவான். மறுபிறவியில் கொக்காகப் பிறப்பதற்கு பயப்படுகிறவன், தலைப்பாகையுடன் புராணத்தை கேட்க மாட்டான். வெற்றிலை பாக்கு முதலியவற்றை வாயில் கடித்துக் கொண்டு கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பவன் மறுபிறவியில் நாயாக பிறப்பான். உயர்ந்த ஆசனத்திலிருந்து கேட்பவன் காக்கையாக பிறப்பான். புராணம் சொல்பவனை வணங்காமல் கேட்பவன் விஷவ்ருக்ஷமாகப் பிறப்பான். படுத்துக் கொண்டே கேட்பவன் பாம்பாக பிறப்பான். புராணம் கூறுபவரின் ஆசனத்துக்கு சமமாக உட்கார்ந்து கேட்பவன் குருவின் பத்தினியிடத்தில் குற்றம் செய்தவனாவான். புராணம் சொல்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்து, அவர் நன்கு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவரை நிந்தித்தல் கூடாது. அப்படி நிந்தித்தால் நூறு முறை நாய்ப் பிறவியை அடைவான். ஏதோ அசெளகரியத்தினால் கதையைக் கேட்க வரமுடியாவிட்டாலும், ‘நன்கு நடந்தது. இது ஒரு ஸத்காரியம்’ என்று சொல்கிறவர்களும் நற்கதியை அடைவார்கள். கடைசியில், புராணம் சொல்பவனைப் பூஜிக்க வேண்டும். கம்பளிகளையும் வஸ்த்ரங்களையும் கட்டில்களையும் பழங்களையும் கொடுக்க வேண்டும். இப்படிக் கொடுப்பவன்தான் விரும்பிய உலகங்களையும் போகங்களையும் அடைவான். இம்மாதிரி பத்மகர்ப்பன் கூறினார்.

நாரதர் – பாண்டவர்களே, துலா காவேரியின் மகிமையைக் கேட்கும் அந்தணர்களுக்கு மிகவும் விஸ்தாரமாகப் பத்மகர்ப்பன் சொன்னார். காவேரிக் கரையில் ஷட்ரஸோபேதமாயும், பல சாகங்களோடு கூடியதும், நெய் பால் முதலியவற்றினால் செய்ததுமான அன்னத்தைத் தரித்திரனான அந்தணருக்கு கொடுப்பவன் கீழ்மேல் ஏழேழ் பிறப்பும் தன் வம்சத்தில் உள்ளவர்களுக்கு நற்கதியை அளிப்பவனாவான். அங்கே தக்ஷிணையுடனும், இரண்டு வஸ்த்ரங்களுடனும் தாம்பூலத்தைக் கொடுக்க வேண்டும். நெய் கால் தயிர் தேன் வெல்லம் ஸ்வர்ணம் முதலியவற்றைக் கொடுப்பவன் எல்லாப் பயனையும் அடைவான். இந்த காவேரியின் பெருமையை மேலும் சொல்ல வேண்டுமா? ஸ்வர்க்க லோகத்திலுள்ள தேவர்களும் இங்கு வந்து பிறந்து இந்த காவேரியில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர். இந்த நிலவுலகில் பிறந்தும் இதில் ஸ்நானம் செய்யாதவன் இறந்தவனுக்கு சமானமானவன். இம்மாதிரி இதன் பெருமையைப் பத்மகர்ப்பன் அந்தணர்களுக்குச் சொன்னபோது காவேரிக் கரையில் ஒரு முதலை காவேரியில் ஸ்நானம் செய்த ஓர் அந்தணனைப் பிடித்துக் கொண்டது.

திடீரென்று ஏதோ நம் காலைப் பிடித்துக் கொண்டதே என்று திடுக்கிட்டான் அந்த அந்தணன். கீழும் மேலும் பார்த்தான். ஐயோ என்று கதறினான். முதலை என்பதை அறிந்து தன்னால் இயன்றவரை முயற்சி செய்தான். முதலை இறுகப் படித்துக் கொண்டது. அப்போது பத்மகர்ப்பன் படித்த ஒரு ஸ்லோகத்தை முதலை கேட்டது. காலையில் துலா மாதத்தில் காவேரியின் தெள்ளிய நீரில் ஸ்நானம் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டு மஹாவிஷ்ணுவின் உலகத்தை அடைவான் என்ற அர்த்தம் கொண்டது அந்த ச்லோகம்.

ப்ராத:காலே துலாமாஸே ய: ஸநாயாத் ஸஹ்யஜாஜலே |
ஸர்வகர்மவிநிர்முக்தோ யாதி விஷ்ணோ: பரம் பதம் ||

இந்த ஸலோகத்தைக் கேட்டதும் அந்த முதலை, முதலை உருவத்தை விட்டு ஆகாயத்தில் நின்ற அழகிய விமானத்தில் ஏறி நின்றது. அழகிய உருவத்தையுடைய கந்தர்வனைப் போல் தோற்றமளித்தது. காவேரியில் ஸ்நானம் செய்த முதலையால் பீடிக்கப்பட்ட அந்தணனும், ‘இது என்ன ஆச்சரியம்!’ என்று உரத்த குரலில் கூறி மகிழ்ந்தான். அங்கே காவேரியின் மகிமையைக் கேட்ட ஜனங்களும், சொன்ன பத்மகர்ப்பனும் எதிரில் கண்டு ஆனந்தமடைந்தனர். பத்ம கர்ப்பன் விமானத்திலுள்ள கந்தர்வனைப்பார்த்து, “விமானத்தில் ஏறியுள்ள கந்தர்வனே, நீர் யார்? நீர் எங்கு வசிக்கிறீர்? சிறிது முன்பு முதலையாக இருந்து ப்ராஹ்மணனைப் பிடித்து ஹிம்ஸை செய்தீர். இப்போது திடீசென்று கந்தர்வராக மாறி விமானத்தில் இருக்கிறீர். உம்முடைய வரலாற்றைக் கூற வேண்டும்” என்றார்.

கந்தர்வன் – நான் பாஞ்சால நாட்டில் பிறந்த அந்தணன்; எனது கோத்திரம் கங்க கோத்திரம்; ஸூர்யபந்து என்பது என் பெயர். ஸகல நூல்களையும் நன்கு கற்றவன். ஆனால் எனக்கு அறிவுக்குத் தகுந்த ஆசாரம் இல்லை. பிராணிகளிடத்தில் இரக்கமற்றவன்; தீக்குறளை சொல்பவன்; எப்போதும் கோபமுடையவன்; பணத்தை சேமிப்பதிலேயே நோக்கமுடையவன்; ‘தேஹி’ என்று கேட்டு வந்த யாசகர்களுக்கு ஒரு நாளும் ஒரு காசும் கொடுக்காதவன்; என்றேனும் இனிதாக உரைத்தறியேன்; என் வயிறு நிரம்புவதிலேயே விருப்பமுடையவன்; என் கால்கள் கோயிலை நாடிச் சென்றதே இல்லை; கைகள் எம்பெருமானைப் புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சித்ததே இல்லை; கண்கள் கடவுளைப் பார்த்ததே இல்லை; தலையும் பரமாத்மனை வணங்கினதில்லை. புராணம் சொல்லும் இடத்தில் என் காதுகள் செல்லவே செல்லா. நாடகம் முதலிய கண்காட்சி சாலையிலேயே என் மனம் ஓடும். தாஸிகளையும் நாட்டியமாடுபவர்களையும் கண்டால் என்னையும் அறியாமல் மனம் செல்லும். இம்மாதிரி விஷயங்களிலேயே நான் செல்வத்தை செலவு செய்தேன். ஒரு ஸமயம் கண்வர் என்னும் மகான் தாம் யாகம் செய்ய விருப்பமுற்று, நான் பணக்காரன் என்பதை அறிந்து என்னிடம் யாசித்தார்.

“உலகில் மக்கள் வாழ வேண்டும்; மழை பெய்ய வேண்டும்; தேவாலயங்கள் செழிப்புடன் இருக்க வேண்டும்; அங்கு வேத ப்ரபந்தங்களின் ஒலி முழங்கவேண்டும்; உத்ஸவங்கள் சரிவர நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு யாகத்தை செய்ய விரும்புகிறேன். அதற்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்து உதவி புரிய வேண்டும்” என்று பன் முறை கேட்டார். அதற்கு நான், “ப்ராம்மணரே, உமக்கு வேறு வேலை இல்லையா? உலகம் கஷ்டப்படுகிறதென்று உமக்கு வருத்தமா? உம்முடைய வயிறு நிரம்புவதற்கும் ஏன் இப்படிச் சொல்கிறீர்? தெய்வம் ஏது? தேவாலயம் ஏது?” என்றெல்லாம் சொல்லி அவரை விரட்டி அனுப்பினேன். அன்று இரவே, அவரை நிந்தித்ததனால் உண்டான பாவம் என் ஆயுர்ப்பாவத்தை அழித்துவிட்டது. ரெளரவம் என்னும் நரகத்தை அடைந்தேன். பிறகு முதலையாகப் பிறந்து ஜலத்தில் வசித்து வந்தேன். இங்கு ஸ்நானம் செய்ய வந்த ஒரு ப்ராஹ்மணனைப் பிடித்தபோது, உம்முடைய முகாரவிந்தத்திலிருந்து வந்து காவேரியின் பெருமையைக் கூறும் ச்லோகத்தைக் கேட்டதும் பாவங்களிலிருந்து விடுபட்டேன். இம்மாதிரி எனக்கு செய்த உபகாரத்தக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

“ஆனால் எனக்கு ஓர் ஐயம் உண்டு. நான் முன்பு செய்த பாவத்தின் பயனாக முதலையாகப் பிறந்தேன். இது உண்மை. தேவரீர் கூறிய ச்லோகத்தைக் கேட்டதும் முதலையுருவம் மாறியது என்பதும் உண்மை. எனக்கும் தேவரீருக்கும் முதலில் ஒரு சேர்க்கை உண்டாயிற்றே. இதற்கு காரணம் என்ன? இந்த சேர்க்கை உண்டானபடியால் அல்லவா தேவரீர் சொன்ன ச்லோகத்தைக் கேட்க எனக்கு வாய்ப்பு உண்டாயிற்று? இதற்கு அநுகூலமான புண்ணியம் நான் என்ன செய்தேன்? அதை எனக்கு கூற வேண்டும்” என்றான்,

இதைக் கேட்டதும், தர்மத்தில் சிந்தையுள்ள பத்மகர்ப்பன் சிறிது ஆலோசித்தார்.

பத்மகர்ப்பன் – கந்தர்வரே, முன்பு ஒரு ஸமயம் ஸஹ்யமலையில் ஒரு ஸபையை மஹான்கள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்தனர். ஸஹ்யமலையிலிருந்து உண்டான இந்த காவேரியின் பெருமையை சொல்லும் புராணத்தை கேட்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்தனர். அதன்படி ஒரு பெளராணிகரை வரவழைத்து, விடாமல் ஒரு மண்டல காலம் சொல்ல ஏற்பாடு செய்தனர். அங்குள்ள எல்லா அந்தணர்களும் மிகவும் பக்தி ச்ரத்தையுடன் இந்த கதையைக் கேட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது வங்க தேசத்துக்கு அதிபனான ஓர் அரசன் இந்த மலையின் அருகிலுள்ள காட்டில் வேட்டையாடி களைப்புற்று மிக்க தாகத்தால் தண்ணீரைப் பருகி ஆற்றிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி இந்த சபைக்கு வந்தான். பெளராணிகர் சொன்ன கதையை மிக்க ஆவலுடன் கேட்டான்; ஆனந்த பரவசனானான்; காவேரியின் பெருமையை நன்கு உணர்ந்தான்.

“காவேரியில் தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்து இந்த உலகத்துக்கு க்ஷேமங்களை கொடுக்கும் அந்தணர்களே! உங்களது பாக்கியமே பாக்கியம்; உங்களை ஒரு நாள் ஆராதிக்க வேண்டுமென்று கருதுகிறேன். நாளை தினம் காவேரியில் அனைவரும் ஸ்நானம் செய்து ஜபதபங்களை முடித்துக்கொண்டு, இங்கு ஏற்படுத்தப்பட்ட சத்திரத்தில் அமுது செய்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான். அதன்படி அனைவரும் சித்தமாக இருந்தனர். அப்போது, கந்தர்வனே, நீயும் ஓர் அந்தண வேடத்தை எடுத்துக்கொண்டு ஆஹாரத்திலும் செல்வத்திலுமுள்ள ஆசையால் அவர்களுடன் கலந்து கொண்டாய். காவேரியில் ஸ்நானம் செய்தாய். புராணம் நடக்கும் இடத்துக்கு சென்று அந்தணர்களையும் பெளராணிகரையும் வணங்கினாய். அவர் மூலமாக அதன் பெருமையைக் கேட்டாய். இப்படிப் பல காரணங்களால் உன் பாபங்கள் போயின. பிறகு ஸ்வர்க்க லோகம் சென்றாய். இவ்வாறு சில நற்செயல்களைச் செயததனால் இப்போது நீ முதலையாக இருக்கும்போது நான் சொன்ன ச்லோகத்தை கேட்க உனக்கு வாய்ப்பு ஏற்பட்டது. காவேரியின் பெருமையை கூறும் ஒரு ச்லோகத்தை கேட்டதனாலேயே உன் முதலையுருவம் போய் விட்டதென்றால் இதில் ஸ்நானம் செய்வதனால் எப்படிப்பட்ட பலன் வரும் என்பதை யாரால் சொல்ல முடியும்? இகலோகத்தில் போகமும், ஸ்வர்க்கம் முதலிய பரலோகமும் இதில் ஸ்நானம் செய்பவர்களுக்கு வந்தே தீரும் என்றார் பத்மகர்ப்பன்.

இவ்வாறு நாரத முனிவர், பன்றியாக இருந்த ப்ரஹ்மசர்மாவினுடைய வரலாற்றையும், முதலையாக இருந்த ஸூர்ய பந்துவின் விமோசனப் பிரகாரத்தையும் சொல்லி, “இந்த விருத்தாந்தத்தைக் கேட்பவனும் சொல்பவனும் ஆயுராரோக்யங்களைப் பெறுவான்; எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவான்” என்று சொல்லி, கார்த்திகை மாதத்தில் இந்த காவேரியில் ஸ்நானம் செய்வதன் பலனைப் பஞ்ச பாண்டவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.

To be Continued…

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. DEAR SIR KINDLY SEND ALL CIRCULARS/NOTIFICATIONS EITHER IN ENGLISH/KANNADA SO THAT I CAN UNDERSTAND IT EASILY AND QUICKLY.PURE TAMIL I AM UNABLE TO UNDERSTAND BECAUSE I AM FROM KARNATAKA SHRIVAISHNAVA IYENGAR COMMUNITY SIR. THANKING YOU, YOURS SINCERELY,(B.K.RAMADAS.) BINDIGNAVILE KRISHNA IYENGAR RAMADAS. ADIEN….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here