காவலிற் புலனை வைத்து

0
1,126 views

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.

Meaning:

O First-Lord who makes and swallows the three worlds! By the impetus of learning your names, freed of senses, overcoming the pall, we exult, stepping on the heads of Yama’s agents.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே! உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ? அஹஹ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை அவற்றின் ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி இத்தனை நாளாக இவற்றை அமுக்கி, ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு, நரகபாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியாநின்றேன்; எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்.

(காவலில் புலனை வைத்து) முன்பு என்னைச் சிறையில்வைத்த இந்திரியங்களை இன்று நான் சிறையில் வைத்தேனென்கிறார். இராவணன் போர்க்களத்திலே இராமபிரானது அம்புகட்கு இலக்காகிப் பட்டுப் போனவாறே மந்தோதரி புலம்புகிறாள் – “இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரிபுவநம் த்வயா-ஸ்மரத்பிரிவ தத்வைரமத்ய தைரேவ நிர்ஜித; என்றாள்; அதாவது-இராவணனே! நீ முன்பு இந்திரியங்களை யெல்லாம் வென்று அதனால் மூவுலகையும் வென்றாய்; (இந்திரியங்களை நிக்ரஹித்துக் கொடுந்தவம்புரிந்து வரம் பெற்றமையால் மூவுலகும் வென்றனனாதலால் இங்ஙன் கூறப்பட்டது.) அந்த இந்திரியங்கள் “இப்பாவி நம்மை இப்படி தலையெடுக்கவொட்டாமல் பண்ணிவிட்டானே; ஆகட்டும் தக்க சமயம் பார்த்து இவனைத் தலையமுக்குவோம்” என்று நெஞ்சில் பகை வைத்துக்கொண்டிருந்து இப்போது உனக்கு பிரதிக்ரியை செய்துவிட்டன எனறாள். (இந்திரியங்களை அடக்காமல் அவற்றுக்குப் பரவசப்பட்டு ஸீதையைக் கவர்ந்ததனால் உனக்கு இக்கேடு விளைந்ததென்றபடி.) அப்படி இராவணனிடத்தில் இந்திரியங்கள் முதலில் பரிபவப்பட்டு. பிறகு அவனைத் தாம் பரிபவப்படுத்தியவாறு போல இவ்வாழ்வார்; முதலில் தாம் இந்திரியங்களால் பரிபவப்பட்டுப் பொன்வட்டில் நிமித்தமாகச் சிறைபட்டிருந்த சினத்தை நெஞ்சில் வைத்துக்கொணடிருந்து ஸமயம்பார்த்து அவற்றைத் தாம் சிறைப்படுத்தினர் என்ற விசேஷார்த்தம் இங்கு உய்த்துணரத்தக்கது.

கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து-கலி என்று கலியுகத்தைச சொல்லிற்றாய் “இவன் க்ருதயுக புருஷர்களில் ஒருவன்” என்று பலருஞ்சொல்லும்படி கலியைக் கெடுத்தேனென்றுமாம்.

நாவலிடுதல்-தோற்றவர் முன்னே ஜயித்தவர்கள் தமது வெற்றியைக் கூறிக் கோஷித்தல். “உழிதருகின்றேன்” என்று ஒருமையாகக் கூறாமல் பன்மையாகக் கூறியவித்தால்-ஒரு புண்ணியசாலியின் ஸம்பந்தத்தாலே பல பாபிகளும் பேறு பெறுவர்களென்னும் சாஸ்த்ரார்த்தம் வெளியாம்; அதாவது-நான் ஒருவன் நின்நாமம் கற்க அந்த ராஜகுல மாஹாத்மியத்தால் என்னைச் சேர்ந்தவர்களும் நமன்றமர் தலைகள் மீது அடியிடும்படியானமை பாரீர் என்கை. வாலியின் பெயர் செவிப்பட்ட வளவில்தானே அஞ்சிச் சுரமடைந்துகிடந்த ஸுக்ரிவ மஹாராஜர் இராமபிரானை அண்டைகொண்ட பலத்தாலே கிஷ்கிந்தாத் வாரத்திலே சென்று அறைகூவினாற்போல இவரும் கீழெல்லாம் நமன்தமர்க்கு அஞ்சிக்கிடந்து இன்று திருநாமத்தை அண்டைகொண்ட பலத்தாலே அவர்கள் தலைகளிலே ஸபரிகரராய் அடியிட்டுத் துவைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here